மொழி என்ற வரையறையை தாண்டி எல்லா விடயங்களிலும் பின்னிப் பிணைந்து, இரண்டறக் கலந்து காணப்படுவது தான் தமிழ். இப்படிப்பட்ட பின்னனியில் இருந்து வளர்ந்த எமக்கு வாழ்க்கையை கொண்டு செல்ல வித்தியாசமான முறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
அத்தகைய எண்ணத்தின் வெளிப்பாடான தேடல்களின் விளைவே “தமிழ் கொசுவுசட்டைகள்”!
எமது பிரதேசத்தை பொறுத்தவரை ஆடை உற்பத்தி என்பது எப்பொழுதுமே ஓர் பக்கச்சாயலுடன் பூர்த்தி செய்யக்கூடிய விடயமாகவே உள்ளது.என்னதான் எமது மக்கள் பரந்து வாழ்வதனையும், சகோதர இனத்தவரின் ஆடைத்தொழில் வன்மையையும், கடந்து வந்த போராட்ட காலங்களையும் காரணங்களாக குறிப்பிட்டாலும் எங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தக்கூடிய, கலாச்சார விழுமியங்களை எடுத்தியம்பக்கூடிய ஆடைவகைகள் தேவை என்ற எண்ணமே எமது சமுதாயத்தில் காணப்படவில்லை என்பதே உண்மை.அக் காலகட்டத்தில் அது ஒரு தேவையான விடயமாகவும் காணப்படவில்லை.
ஆனால் இன்றைய நடைமுறை உலகில் மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு வருகின்ற பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரத்தை புதிய சந்ததிக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு மீள அறிமுகப்படுத்த இந்த தமிழ் கொசுவுசட்டைகள் காணப்படுகின்றது.
எமது நோக்கம் இவ் வையகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மானுடனும் தன்னுடைய அடையாளத்தை பற்றுடனும் பெருமிதமாகவும் நோக்க வேண்டும் என்பதாகும். பல்வேறு ஆய்வுகள், சிரமங்களுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டு ஆடி மாதம் அளவில் யாழ்ப்பாணத்தில் எமது நோக்கை சாத்தியமாக்க முடிந்தது.அக்காலப்பகுதியில் இந்தியாவில் தமிழ் பரதிபலிப்படன் கூடிய மேலாடைகள் பரவலாகிக் கொண்டிருந்தமை எமக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
முதற்கட்டமாக இந்தியாவில் இத்தகைய முயற்ச்சியில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பை பலப்படுத்தி அவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் எமது முயற்ச்சியை “தமிழ் கொசுவுசட்டைகள்” என்ற பெயரில் விற்பனை செய்தோம்.காலத்தின் தேவை ஓர் வியாபார நாமம் மேலும் மெருகூட்டப்பட்டு “போகர்” என்ற பெயரில் தற்பொழுது விற்பனையாகி வருகின்றது.
எமது முயற்ச்சியின் பெரு வளர்ச்சியாக கருதக்கூடிய விடயமாக தற்பொழுது முற்றுமுழுதாக எம்மால் வடிவமைக்கப்பட்ட எம்மவர்களின் சிந்தனைகளை தாங்கிய கொசுவுசட்டைகளை எமது சமூகத்திற்கு விற்பனை செய்ய முடியுமாக உள்ளமையை குறிப்பிடலாம்.
மேலும் நாம் சமூக நலன் கருதி பொலித்தீன் பாவனையற்ற விற்பனை நடைமுறைகளை கைக்கொள்வதுடன் சுற்றுச் சூழலை வளப்படுத்தும் நோக்குடன் ஒவ்வொரு கொசுவுசட்டையுடனும் பலன்தரும் மரநாற்றுக்களையும் இலவசமாக வழங்கி வருகின்றோம்.